முகப்பருக்களுக்கு இயற்கையான தீர்வு - எளிய வழிமுறைகள் !

0

டீன் ஏஜ் பருவத்தினரின் முக்கியக் கவலைகளுள் ஒன்று முகப்பரு. என்னதான் பலவகை க்ரீம்களையும் சோப்புகளையும் பயன்படுத்தினாலும், முகப்பரு பிரச்னைக்குத் தீர்வு கிடைத்தபாடில்லை. இதனால் ஏற்படும் மனஉளைச்சலும் தாழ்வுமனப்பான்மையும் கடுமையானவை. 

வெளியில் செல்லும்போதும், பொது நிகழ்ச்சிகள், விசேஷங்கள், திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும்போதும், போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும்போதும் முகப்பரு தரும் சங்கடத்தை சிலர் பெரிய பிரச்னையாக உணர்வார்கள்.  சில பருக்கள் வலி, அரிப்பை ஏற்படுத்துவதோடு, மறைந்தாலும் தழும்பை உருவாக்கி, முகத்தின் அழகைக் கெடுக்கின்றன. 


முகப்பருவை நீக்க கிரீம் வகைகளை பயன்படுத்துவதை விட இயற்கை வழி முறைகளை பயன்படுத்தி பாருங்கள். அது உங்களுக்கு பக்கவிளைவுகள் இன்றி சிறந்த தீர்வை தரும்.


முகப்பருக்களுக்கு இயற்கையான தீர்வு  - எளிய வழிமுறைகள் :


சந்தனம்  :   

சந்தனத்தூளைப் பன்னீரில் குழைத்து, முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். மூன்று மாதங்கள் இவ்வாறு செய்துவந்தால், பருத்தொல்லை நீங்கும். சந்தனக் கட்டையைப் பன்னீர் விட்டு அரைத்து, முகத்தில் தடவினால், பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.


புதினா இலைகள் :  

பருக்கள் மீது புதினா இலைகளை அரைத்து தடவலாம். அல்லது வேப்பிலை பொடியுடன் மஞ்சள் சந்தனம் கலந்து பருக்கள் மீது பூசி வரலாம்.


ரோஜா மொட்டு :

ரோஜா மொட்டுக்களை எடுத்துச் சூடான நீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின், அந்த நீரை வடிகட்டி, முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறிய பின், துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு வாரத்துக்கு இரண்டு முறை செய்துவர, முகப் பருக்கள் நீங்கி, சருமம் பொலிவடையும்.


பப்பாளி :

பப்பாளி விழுதுடன் அருகம்புல் சாறு, பன்னீர் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். இது சூரிய வெப்பத்தால் ஏற்பட்ட கருமை மற்றும் முகப்பருக்களை நீக்கும்.


எலுமிச்சைச் சாறு :

எலுமிச்சைச் சாறு, ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் மூன்று நாட்கள் இவ்வாறு செய்துவந்தால், முகப்பரு மறைந்துவிடும். எக்காரணம்கொண்டும் எலுமிச்சைச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தைப் பாதிக்கும். பன்னீர் வாங்கும்போது, அதன் தரத்தைப் பரிசோதித்து வாங்கிப் பயன்படுத்துவது அவசியம்.


வேப்பிலை : 

வேப்பிலை சிறந்த கிருமி நாசினி. கொழுந்து வேப்பிலையைத் தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ, முகப்பருக்கள் நீங்கும்.

வேப்பிலை பொடி, புதினா பொடி, துளசி பொடி மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து நீரில் குழைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து 5 நாட்கள் செய்து வந்தால் பருக்கள் படிப்படியாக மறையும். இந்த கலவையை கண்களுக்கு கீழ்புறம் தடவக்கூடாது.


சோற்றுக்கற்றாழை  :

சோற்றுக்கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. காற்றாழையின் நடுப்பகுதியில் உள்ள சோற்றை எடுத்து, நீரில் நன்றாக அலசியபின், சோற்றை கூழாக்கி முகத்தில் தடவிவர, பருவுக்கு நல்ல பலன் கிடைக்கும்.



குப்பைமேனி இலை  :  

அருகம்புல் பொடி, குப்பைமேனி இலை பொடி இரண்டையும் சம அளவு எடுத்து நீரில் குழைத்து இரவு தூங்கும்போது பருக்களின் மீது தடவி காலையில் முகத்தை கழுவ வேண்டும். இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்தால் பருக்கள் முற்றிலும் நீங்கிவிடும்.  இது, சிறந்த கிருமி நாசினியாகச் செயல்படுகிறது. பருவைக் குணமாக்கும்.


வெள்ளரிக்காய் : 

வெள்ளரிக்காயை அரைத்து அதை முகத்தில் தடவுங்கள். இது எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு அதிகப்படியான எண்ணெயை நீக்கி முகப்பருக்களையும் முற்றிலும் நீக்கும்.


ஃபேஸ் பேக்குகள்  :  

ஆப்பிள் மற்றும் பப்பாளிச் சாற்றை முகத்தில் பூச வேண்டும். ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசிவர, பருக்கள் மறையும். வாரம் இருமுறை இதைச் செய்ய வேண்டும். ஒரு டீஸ்பூன் ஆரஞ்சுப் பழச்சாற்றை, ஒரு டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து அதை முகத்தில் தடவி, அரை மணி நேரம் ஊறிய பிறகு துடைத்துவிடவும். சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை நீங்கி, பருத்தொல்லை அகலும்.


முகப்பருக்களைத் வராமல் தடுக்க பின்பற்றவேண்டிய வழிமுறைகள் !


* சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்துக்குத் தேவை. அவ்வப்போது காலையில் 7 முதல் 8 மணி வரை ’சன்பாத் (Sunbath)’ எடுப்பது அவசியம்.


* முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். பழங்கள்,​ காய்கறிகள்,​ கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.


* கீரைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளை நிறையச் சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும்.


* கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய், கேக், ஐஸ்கிரீம், சாக்லேட், பாலாடை போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.


* பருக்கள் ஏற்பட, மலச்சிக்கல் ஒரு முக்கியக் காரணி. அன்றாட உணவுபழக்கத்தைச் சரிசெய்வதன் மூலமாக மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


* பருக்களைக் கிள்ளவோ, அழுத்தவோ கூடாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், கடைகளில் கிடைக்கும் எந்தவித வாசனை சோப்புகளையும் லோஷன்களையும் பயன்படுத்தக் கூடாது.


* முகத்துக்கு மஞ்சள் பூசுவதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு ரசாயனத்தன்மை இருக்கிறது. இது சருமத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது.


* பொடுகுத் தொல்லை,​ நீளமாக நகம் வளர்த்தல்,​ முறையற்ற உணவுப்பழக்கம்,​ உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


* தலையணை உறை,​ சோப்,​ டவல் போன்றவற்றைத் தனித்தனியாக ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும். முகப்பரு இருப்பவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றொருவர் பயன்படுத்தும்போது அவருக்கும் பரவக்கூடும்.


* முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது நீரில் முகத்தைக் கழுவி, சுத்தப்படுத்த வேண்டும்.


* குளிப்பதற்கு அமிலத்தன்மை மற்றும் அதிக உப்பு இல்லாத சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.


* தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையால், சருமத் துவாரங்களில் உள்ள அழுக்குகள் நீங்கி, பருக்கள் வராமல் தடுக்கும்.


* பவுடர், அழகு சாதன கிரீம்கள் உபயோகப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.



 

Post a Comment

0Comments
Post a Comment (0)