இயற்கை வரமளித்த மஞ்சள்...! - அள்ளிதரும் அற்புத பலன்கள் ...!

0

மஞ்சள் இயற்கை  அளித்த ஒரு வரப்பிரசாதம்...  "மஞ்சள் இருக்க அஞ்சேல்!" என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள்.   மஞ்சளை "ஏழைகளின் குங்குமப்பூ" என்பார்கள். விலை உயர்ந்த குங்குமப்பூ தரும் பலன்களைக் குறைந்த விலையில் கிடைக்கும் மஞ்சள் தருகிறது. இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள் இது.  "அழகு, ஆரோக்கியம், ஆன்மிகம்" என மூன்றும் கலந்த முத்தான மூலிகை மஞ்சள் . 




மஞ்சள் தமிழ் நாட்டிலே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்த மருத்துவத்தின் பிரதான பகுதியாக பயன்படுத்தப்பட்டது.  இது முதலில் நிறமூட்டவே பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் இது மருத்துவத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது.  அதிலும், கஸ்தூரி மஞ்சள் என்றும் அறியப்படும் காட்டு மஞ்சள்... பல்வேறு மருந்திலும், அழுகு சாதன பொருட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அழகை அதிகரிக்கும் ஒரு இயற்கை மூலப்பொருளாக இந்த கஸ்தூரி மஞ்சள்  உள்ளது. பெண்களில் அழகை மெருகேற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது. அற்புத பயண்களை அள்ளித்துரும்  இயற்கையின் ரகசியம்  மஞ்சள்.


மஞ்சள்  செடி

மஞ்சள், அரிணம் அல்லது பீதம் (Curcuma longa) உணவுப் பொருட்களில் நிறம், சுவை கூட்டியாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் பயிராகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. 



நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை தமிழர் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். 


இதன் அறிவியல் பெயர், 'குர்க்குமா லாங்கா’ (Curcuma longa).  இதில் உள்ள 'குர்க்குமின்’ (Curcumin)  என்ற வேதிப் பொருள்தான் மஞ்சள் நிறத்தைத் தருவதோடு, மஞ்சளின் நற்பலன்கள் அனைத்துக்கும் காரணியாகவும் விளங்குகிறது.  இஞ்சிக் குடும்பம் வகையை சேர்ந்தது.  மஞ்சளின் தாயகம் ஆசிய கண்டம். இந்தியாவில் அதிகம் புனிதப் பொருளாக மற்றும் அருமருந்தாக கொண்டாடப்படுகிறது. 


குர்க்குமின் - வேதிப்பொருள்

மஞ்சளில் குர்க்குமின் (Curcumin) எனும் வேதிப்பொருள் உண்டு, இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடியப் பல்வேறுபட்ட பயன்களைத் தரும் பொருளாக உள்ளது. இந்த குர்குமின் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் சீரமைப்பதிலும் சிறந்து செயல்படுகிறது. வேதியியல் ரிதீயாக பொட்டாசியம் சத்து அதிகமாகவும் அவற்றோடு எதிர் ஆக்ஸிகரணியாகவும் எதிர் தொற்றாகவும் செயல்படுகிறது. மஞ்சள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும், மூளை தொடர்பான மறதி நோய் மற்றும் மன அழுத்த பிரச்னைகளை போக்கும் ஆற்றல் கொண்டது என்று அறிவியல் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


தமிழர்களின் வாழ்வில் மஞ்சள் பெரும் பங்காற்றுகின்றன...!

இந்துக்களின் மதச் சடங்குகளின் மஞ்சள் புனிதப்  பொருளாக உபயோகிக்கிறார்கள். வீட்டு தொடக்கமான நிலப்படியில் ஆரம்பித்து, சமையல் அறை, பூஜை அறை, பின் தோட்டம் மாடத்தில் உள்ள துளசி செடியில் மஞ்சள்,  என்று எல்லா இடத்திலும் மங்களம் அடங்கிய பொருள் மஞ்சள் ஆகும். 

ஜோதிடத்தில் மஞ்சள் என்பவர் குரு என்ற சுபர் ஆவார். ஒரு வீட்டில் சுபிக்ஷம் பொழிய வேண்டுமானால் குருவின் அருள் வேண்டும். அவரை பிள்ளையாராகப் பிடித்தால் கெட்ட சக்திகள் ஆட்கொள்ளும் கிரகங்களைத் தூக்கி எரிந்து நேர்மறை அதிர்வு சக்தி பெருகும் என்பது ஒரு விதி.  மஞ்சள் தூளில் நீர் விட்டு கலந்து பிள்ளையார் பிடித்து அறுகம்புல் வைத்து பிள்ளையாராக வழிபடுவர்.. குங்குமம் தயாரிக்க மஞ்சள் முக்கியம். 


திருமணத்தில் திருமாங்கல்ய கயிறு, காப்பு, அட்சதை அரிசி என  அனைத்திலும் உள்ளது மஞ்சள். 


பொங்கல் திருநாளில் பொங்கல் பானையுடன்,  மஞ்சள் செடியையும் வைத்து பூஜை செய்து வழிபடுகின்றனர்.


மாரியம்மன் கோயிலுக்கு தீச்சட்டி எடுப்பவர்கள் மீது முதலில் மஞ்சள் கலந்த நீர் ஊற்றப்படுகிறது.


புதிதாக ஒரு வீட்டில் குடிபுகுபவர்கள் உப்பு, மஞ்சள் போன்றவற்றை தெய்வ படத்தின் முன் வைத்து அதன் பின்னரே பால் காய்ச்சுகின்றனர்.


புத்தாடை அணிவதற்கு முன்பு அதில் மஞ்சளை இட்டு பின்பு அணிகின்றனர்.


திருவிழாக் காலங்களில் உறவினர்கள் மீது மஞ்சள் நீரை தெளிப்பர்.


மஞ்சள் நீராட்டு விழா... மஞ்சள் தண்ணீர் ஊற்றுதல் என்று வாழ்வியலில் மஞ்சள் அதிகம் பங்காற்று கின்றன.


மஞ்சளின் வகைகள் 

மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் ‘ஆலப்புழை மஞ்சள்’ உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது.

  • முட்டா மஞ்சள்
  • கஸ்தூரி மஞ்சள்
  • விரலி மஞ்சள்
  • கரி மஞ்சள்
  • நாக மஞ்சள்
  • காஞ்சிரத்தின மஞ்சள்
  • குரங்கு மஞ்சள்
  • குடமஞ்சள்
  • காட்டு மஞ்சள்
  • பலா மஞ்சள்
  • மர மஞ்சள்
  • ஆலப்புழை மஞ்சள்


முட்டா மஞ்சள்  இது சற்று உருண்டையாக இருக்கும். இதை அரைத்தோ, கல்லில் உரைத்தோ முகத்திற்குப் பூசுவார்கள்.


விரலி மஞ்சள்  இது நீள வடிவில் இருக்கும். இதுதான் கறி மஞ்சள்


கஸ்தூரி மஞ்சள்  : இது வில்லை வில்லையாக, தட்டையாக இருக்கும். வாசனை நிறைந்தது.


மஞ்சளின் பொதுப்பயண்கள்

சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது.
பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.
சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது.
உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.
பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது.
வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது.
இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது.
நிப்பானில் ஒகினாவா என்னும் இடத்தில் தேனீர் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது.
காய்கறிகளை வாங்கியவுடன் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் கலுவி பயன்படுத்துவதால் மரபனு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.


மஞ்சளின் மருத்துவ பயண்கள் 

மஞ்சளில் உள்ள குர்க்குமின் (விதையிலுள்ள ஒரு ரசாயனப் பொருள்) என்ற நிறமிதான் அதன் மஞ்சள் நிறத்துக்குக் காரணமாக உள்ளது. இந்த  ரசாயனப் பொருள் புற்றுநோய்க் கட்டி ஏற்படாமல் தடுக்கவும், ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், பாக்டீரியாக்களின்  தாக்குதலை முறியடிக்கவும் உதவுகிறது.

காய்கறி, கீரையுடன் மஞ்சளைச் சேர்த்துச் சமைக்கும்போது, புழு, பூச்சிகள் அழிக்கப்பட்டுவிடும்.


நோய் எதிர்ப்பு சக்தி

மஞ்சள் பொடியை உணவில் சேர்த்துச் சாப்பிடும்போது அதிலுள்ள சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது. இது உடலிலுள்ள செல்களுக்கு முழு பாதுகாப்பை தருகிறது. 


வயிற்று வலி -  உப்புசம்

கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுத்து இதனை தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை சரியாகும். 


சாதம் வடித்த நீரில் சிறிது மஞ்சள்தூளைக் கலந்து குடித்தால் வயிறு உப்புசம் சரியாகும்.


சம அளவு மஞ்சளையும் மிளகையும் அரைத்து மோரில் கலந்து குடித்தால், பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் வயிற்று வலி கட்டுப்படும். தலைவலி குணமாகும்.


பிரசவ வயிறு இறுக

பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் தங்களுடைய உணவில் மஞ்சளைச் சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக்கொள்வது நல்லது. கர்ப்பக் காலத்தில் வயிற்றில் ஏற்பட்ட தளர்ச்சி குறைந்து, வயிறு இறுக இது உதவுகிறது.


தொண்டைப்புண் 

மஞ்சள் தூளை பாலில் போட்டுக் காய்ச்சி சாப்பிட வாய்ப்புண், தொண்டை எரிச்சல், வயிற்றில் எரிச்சல் போன்றவை சரியாகிறது.

மஞ்சள் சேர்த்துக் கொதிக்கவைத்த வெந்நீரில் வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் ஆறுவதோடு, சளி முறிந்து எளிதில் விளியாகும்.


ஜலதோஷம், கடும் தலைவலி

விரலி மஞ்சளைச் நல்லெண்ணெய் விளக்கில் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், மூக்கடைப்பு மற்றும் இரைப்பு, ஜலதோஷம், கடும் தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும். மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும். 


தொடர் இருமல்

கபம் மற்றும் உஷ்ணம் அதிகரிப்பினால் ஏற்படும் தொடர் இருமபல் உள்ளவர்கள், ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் உடன் பசும்பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் மூன்று நாட்களுக்குள் குணமாகிவிடும்.  இரவில் தூக்கம் நன்றாக வரும். 

கண் வலி

கண் வலி இருப்பவர்களுக்கு ஒரு ஸ்பூன் நசுக்கிய மஞ்சளை சுத்தமான நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிய  நீரில் துணியை நனைத்து, கண்களின் மேல் போட்டுக் கொண்டால் கண் வலி குறையும் 


தோல் நோய் - காயங்கள் 

அடிபட்ட காயங்களின் மீது மஞ்சளைப் பூச, ரத்தம் வெளியேறுவது தடுக்கப்படும்.

தீப்புண் ஏற்பட்டால் சிறிது வெங்காயச் சாற்றுடன் மஞ்சள்தூளைக் குழைத்துப் பூசினால் குணமாகும்.

குளவி, தேனீ போன்றவை கொட்டினால், வலி - கடுப்பு ஏற்படும். மஞ்சளுடன் வேப்பிலையைச் சேர்த்து அரைத்துக் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்; வலி குறையும்.

அருகம்புல்லுடன் மஞ்சளைச் சேர்த்து அரைத்து வியர்க்குரு மற்றும் வேனல் கட்டிகளில் தடவி, இரண்டு மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இதுபோல் தொடர்ந்து செய்துவர சில நாட்களில் தொல்லை நீங்கும்.

மஞ்சளுடன் அரிசி மாவைச் சேர்த்து களியாகக் கிண்டியோ, சதத்துடன் சேர்த்து அரைத்தோ அதை கட்டிகளின் மீது போடுவதால் அது பழுத்து  உடையும்.

மஞ்சள், வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப்போட்டு வந்தால் அம்மை கொப்புளங்கள்,  சேற்றுப்புண் போன்றவை குணமாகும். 

கஸ்தூரி மஞ்சள் அரைத்துப் பசையாக்கித் தேய்த்துக் குளிக்க கரப்பான், பருக்கள், கொப்பளம், அரிப்பு, சொரி, சிரங்கு, சீழ்க் கட்டி, கிருமி நோய்கள் போன்றவற்றைப் போக்கும். 


கஸ்தூரி மஞ்சள்  அற்புத பலன்கள்

இயற்கை நமக்கு அளித்த ஒரு வரப்பிரசாதமாகும் கஸ்தூரி மஞ்சள் .  சாதாரண மஞ்சளை விட இதற்கு நறுமணம் அதிகம் இருக்கும்.  

கஸ்தூரி மஞ்சள் எனப்படுவது காய்ந்த கிழங்குகளே ஆகும். கஸ்தூரி மஞ்சள் கைப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டுள்ளது.   

கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரி மஞ்சள் மலைப் பகுதிகளில் இயல்பாக வளர்ந்தாலும் இதன் மருத்துவ மற்றும் வாசனை பண்புக்காக பெருமளவில் பயிர் செய்யப்படுகின்றது. செடியின் கிழங்குகள் காய வைக்கப்பட்டு மணமுள்ள கஸ்தூரி மஞ்சளாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றது.  கஸ்தூரி மஞ்சள் பெரும்பாலும், வெளி உபயோகத்திற்கான மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.  தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. 


கஸ்தூரி மஞ்சள் ஓர் அழகுசாதனப் பொருளாக உள்ளது. சருமத்தைப் பொலிவாக்கும் ஆற்றல் கஸ்தூரி மஞ்சளுக்கு உண்டு. எனவேதான் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு அந்தப் பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது. 

அதற்குப் பதிலாக மஞ்சள் சேர்க்கப்பட்ட அழகு க்ரீம்களைப் பயன்படுத்துகிறார்கள். காசு அதிகம் கொடுத்து ரசாயனங்களுடன் சேர்க்கப்பட்ட மஞ்சளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இயற்கையாகக் கிடைக்கும் மஞ்சளைப் பயன்படுத்தியே அழகைப் பெறலாமே! 

முகத்தில் மஞ்சள் தேய்ப்பதால் மஞ்சள் நிறம் படிவதாலே இன்றைய தலைமுறையினர் இதை தவிர்க்கின்றனர். இதற்கு ஓர் அற்புதமான வரமாக கஸ்தூரி மஞ்சள்... உள்ளது... இது தங்கத்திற்கு சமமானது... இயற்கையே கஸ்தூரி மஞ்சளில்.. அதிக நறுமணத்தை வைத்துள்ளது

சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு கிடைக்கும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வரவே வராது.


அழகும் பொலிவும் தரும்   கஸ்தூரி மஞ்சள்

மஞ்சளும் சந்தனமும் கலந்து முகத்துக்குப் பூசிவந்தால், மினுமினுப்பு ஏறும். கரும்புள்ளிப் பிரச்னை இருக்காது.

பூலாங்கிழங்கு
கஸ்தூரி மஞ்சளையும், பூலாங்கிழங்கையும் சமஅளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். இதனை தினமும் செய்து வர வேண்டும்.

கஸ்தூரிமஞ்சள், பயித்தமாவு, தயிரை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். முகப் பளபளக்க இது ஒரு சிறந்த பேஸ் பேக் ஆகும். 

முகத்தில் இயற்கை அழகு பெற, கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, பச்சைப்பயறு மாவு, பாலாடை நன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவலாம். இதனை தினமும் செய்யலாம் அல்லது வாரம் 4 முறை செய்ய வேண்டும்.

தோல் நோய்கள் தீர கஸ்தூரி மஞ்சள் தூளை வெந்நீரில் குழைத்து மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும் அல்லது கஸ்தூரி மஞ்சள், துளசி ஆகியவற்றைச் சம அளவாகச் சேர்த்து, அரைத்து, உடலில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்கலாம். 



எலுமிச்சை, தேன் மற்றும் கஸ்தூரி மஞ்சள் கலவை உங்கள் சருமத்தின் உண்மையான அழகை மீட்டுத் தரும்.

காய்ச்சாத குளிர்ந்த பால் , கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் முல்தானிமிட்டியுடன் சேர்க்கப்படுவதால், அதன் குளிர்ச்சி சருமத்தில் நீடித்து நிற்க உதவுகிறது. இதனால் சருமம் மிருதுவாகவும் மென்மையாகவும் மாறுகிறது.

மைசூர் பருப்பு ஒரு அருமையான ப்ளீச். சருமத்தின் எந்த ஒரு பகுதியிலும் இதனை பயன்படுத்தலாம். இந்த பருப்பை பொடியாக்கி, கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து கலந்து சருமத்தில் தடவுவதால் நீங்கள் விரும்பும்  பளிச்சென்ற அழகை உங்கள் சருமம் பெற்றிடும். 

தக்காளி விழுது, மற்றும் பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய்யுடன் கஸ்தூரி மஞ்சளை கலந்து பேஸ் பேக்காக பயன்படுத்தலாம். தக்காளி ஒரு சிறந்த ப்ளீச். இது ஒரு மென்மையான பொருள். சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமத்தை சேதத்தில் இருந்து மீட்க தக்காளி உதவுகிறது. பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது. மேலும் ஒரு நறுமணத்தை சருமத்திற்கு கொடுக்கிறது.

பாலுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து குழந்தையின் உடலில் தேய்ப்பதால், தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடும் இதனை தொடர்ந்து செய்து வருவதால் முடிகள் இல்லாத வழவழப்பான சருமம் குழந்தைக்கு கிடைக்கிறது. மேலும் குழந்தையின் சருமம் அதிக வெண்மையாக களங்கமில்லாமல் மாறுகிறது. கஸ்தூரி மஞ்சள் குளியல், குழந்தைக்கு மேலும் நன்மையைத் தருகிறது. கஸ்தூரி மஞ்சளில் இருக்கும் கிருமி எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மையால், குழந்தைக்கு சரும தொடர்பான பிரச்சனைகளான, ஒவ்வாமை, சிவப்பு தடிப்புகள் போன்றவை ஏறப்டாமல் தடுக்கப்படுகிறது.
 

1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில், 50 கிராம் கஸ்தூரி மஞ்சள் தூளைப் போட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு, மேல் பூச்சாகக் பூசி வர உடல் வலி தீர்ந்து விடும்.


Post a Comment

0Comments
Post a Comment (0)