உணவே மருந்து : முருங்கை கீரை.. பூ.. பட்டை.. என அனைத்தும் மருத்துவ குணம்

0

பழங்காலத்தில் இருந்து முருங்கை மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. முருங்கைக்கீரை, முருங்கைப்பூ, பட்டை, காய் என  முருங்கையில் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டது...



இலைகள் மிகவும் சத்தான பகுதியாகும். இலைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளது. இதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருப்பதால் வளரும் நாடுகளில் இது ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது. 


இதன் கீரை (இலைகள்) மற்றும் காய்கள், இரத்தத்தை சுத்திகரிக்கும் பண்புகள் கொண்டதாகவும் மற்றும் ஒரு வலிமையான கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.


மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத 8 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இறைச்சியில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ  உணவு முருங்கைக்கீரை ஆகும்.


முருங்கைப் பூ :

முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கைப்பூவை பொடிமாஸ் மாதிரி செய்து சாப்பிடலாம். அரைவேக்காடு  வேகவைத்த பாசிப்பருப்புடன், முருங்கைப்பூவையும் பொடியாக நறுக்கிய வெங்காயமும் சேர்த்து சமைத்து சாப்பிடுவது குழந்தையின்மைப் பிரச்னை தீர உதவும்.  கர்ப்பப்பைகோளாறுகளை சரி செய்யும்.. 



முருங்கைப் பூவை பாலிலிட்டுச் காய்ச்சி அருந்துவதால் ஆண்மை மிகும்  இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. உடல் பலம் பெறும்.  


முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. 


முருங்கைக் காய்  :

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். கோழையை அகற்றும். 


முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம். முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம்.


கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து. முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம்.


முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம். 


வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது.


முருங்கை காயை எந்த வகையிலாவது தொடர்ந்து சமைத்து சாப்பிட சளி குறையும்.


முருங்கை கீரை :

முருங்கை கீரையில் கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் மிகுதியாக உள்ளன. 


முருங்கைகீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய் இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.


முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும்.


இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், ஐயன், வைட்டமின் உள்ளது. கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். 


மாலைக் கண் தீர, இரத்தம் விருத்தியாக முருங்கை கீரையை வதக்கியோ, கூட்டு கீரையாக கடைந்தோ சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் முக்கியமாக மாலைக்  கண் நோய் வராமல் தடுக்கலாம். இரும்புச் சத்து மிகுதியாக உள்ளதாலும் வைட்டமின் -“ஏ” சத்து உள்ளதாலும் இவ்வாறு பயன்படுகின்றது.


ஆஸ்துமா, மார்ச்சளி, சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. 


முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருங்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிருத்தி செய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சள்காமாலை, குடலில் ஏற்படும் திருகுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.


முருங்கை இலையில் உள்ள பாக்டீரீயா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தியானது,  உங்களுடைய சருமத்தில் உண்டாகின்ற தொற்றுக்கள், பாக்டீரியாவினால் உண்டாகும் பிரச்சினைகள் போன்றவற்றில் இருந்து உங்களைக் காப்பாற்ற உதவுகிறது. இது சிறுநீர்ப் பாதையில் ஏற்படுகின்ற தொற்றுக்களைப் போக்கவும்  உதவுகிறது.


முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும். 


முருங்கைக்கீரையை உலர்த்தி பொடி செய்து வயிற்று வலி மற்றும் பேதியின்போது ஒரு ஸ்பூன் வாயிலிட்டு நீர் அருந்துவதால் குணம் அடையும்.


ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு  பல மடங்கு அதிகரிக்கும்.


முருங்கை கீரையை நன்றாக வேக வைத்தே உண்ண வேண்டும்,வேகவில்லையென்றால் செரிமான கோளாறை உண்டாக்கும்.


முருங்கைப் பட்டை :

முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. 


முருங்கைப் பட்டையை இடித்து சாறாக்கி, இஞ்சி சாறுடன் வெந்நீரில் சிறிது உப்பு கலந்து குடித்தால் வயிற்றுப் பூச்சிகள் மறைந்து வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். பசி தோன்றும்.


பிசின் :

முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.


பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும். 


இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும். 


முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்து சாப்பிட்டு வந்தால் வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே  வராது.


சர்க்கரை நோயாளிகளுக்கு  முருங்கையைப் போன்ற மாமருந்து  இந்த உலகில்  வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள்  இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப்  பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


முருங்கையின் மூலம் கிடைக்கிற புரதமானது முட்டை, பால் மற்றும் இறைச்சியில் கிடைக்கக்கூடிய புரதத்துக்கு இணையானது. மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. 


முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக  வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது. மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள்  அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்


Post a Comment

0Comments
Post a Comment (0)